நாட்டின் மிக முக்கியமான சிந்தனைக் குழுவாக இருக்கும் சென்டர் ஃபார் பாலிசி ரிசர்ச் (சிபிஆர்) அமைப்பின் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட (எஃப்.சி.ஆர்.ஏ) உரிமத்தை இடைக்காலத்திற்கு ரத்து செய்யும் இந்திய அரசின் முடிவு, அரசைப் பற்றிய மோசமான பார்வைக்கு இட்டுச் செல்வதுடன் கருத்து ரீதியாகவும் மோசமானது. சி.பி.ஆரின் ஊழியர்களின் வருமான வரி ஆவணங்களில் உள்ள குறைபாடுகள், கணக்கியல் நடைமுறையில் சரியான செயல்முறை இல்லாதது மற்றும் சி.பி.ஆரின் நோக்கங்களுக்கு தொடர்பில்லாத புத்தகங்களை வெளியிட நிதியைத் திருப்புவது போன்றவற்றை இதற்கான காரணங்களாக அதிகாரிகள் சொல்கிறார்கள். மதிப்புமிக்க ஒரு நிறுவனத்தை சட்ட நடைமுறைகளின் புதைகுழிக்குள் இழுக்கும் ஆர்வம்தான் இந்த முழு செயல்பாட்டிலும் வெளிப்படுகிறது. அரசுகள், பொது மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் அரசுத் திறனை மேம்படுத்துவதற்கும் சிபிஆர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அண்மைக் காலமாக பல தன்னார்வ நிறுவனங்களும் பிரச்சாரக் குழுக்களும் அரசின் கோபத்துக்கு ஆளாகியிருக்கின்றன. ஆனால், இப்போது சி.பி.ஆர் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை, அரசியல் சகிப்புத்தன்மையின் அளவை மிக மோசமான மட்டத்துக்கு குறைக்கிறது. அனைத்து வகையான சிந்தனைச் செயல்பாடுகளின் மீதும் விவரிக்க முடியாத ஒரு விரோதப் போக்கையே இது காட்டுகிறது. சுயநல நோக்கங்கள் கொண்ட வெளிநாட்டு அமைப்புகள் இந்தியாவின் உள்நாட்டு அரசியலின் மீது தேவையற்ற தாக்கம் செலுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் ஒரு ஒழுங்குமுறை அமைப்பாகவே எஃப்.சி.ஆர்.ஏ இருக்கிறது. ஆனால், அரசு சாரா துறையைத் தெளிவாக முடக்கும் வகையில் சட்டத்தை பரவலாகப் பயன்படுத்துவது, பழிவாங்கும் மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்ட சிந்தனையற்ற அணுகுமுறையையே காட்டுகிறது. நாட்டின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியின் தரத்தை உயர்த்த இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு இடையே கல்வி பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப
தனிச்சிறப்பு மையமாகவும் உற்பத்தி மையமாகவும் உருவெடுக்கவும் இந்தியா விரும்புகிறது. சமீபத்தில், இரண்டு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களை அமைக்கும் திட்டத்தை அறிவித்தன. ஆனால், சி.பி.ஆர் மீது விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் போன்ற பிற்போக்குத்தனமான, பாதுகாப்பின்மையை வெளிப்படுத்தும் இந்திய அரசின் நடவடிக்கைகள் அதன் சர்வதேச லட்சியங்களுடன் முரண்படுகின்றன. உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்கு இரு திசைகளிலும் தகவல், பணியாளர்கள் மற்றும் நிதி பரிமாற்றம் தேவைப்படுகிறது. தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக இவை அனைத்தின் மீதான கட்டுப்பாடுகள் எல்லா இடங்களிலும் விதியின் ஒரு பகுதியாக இருப்பதுடன், ஏற்றுக் கொள்ளக்கூடியவையும்தான். ஆனால் இவற்றை அரிதாகவே பயன்படுத்த வேண்டும். சர்வதேச தொழில்நுட்பத்தையும், மூலதன வரவையும் எதிர்பார்க்கும் அதே வேளையில், இந்தியச் சிந்தனைகள் அந்நிய சிந்தனைகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று கருதுவது பெரிய முரண்பாடு. எப்படிப் பார்த்தாலும், இந்தியாவைப் போன்ற வேகமாக வளர்ந்து வரும் ஒரு நாட்டுக்கு ஆராய்ச்சியின் திறனை பெருமளவில் விரிவுப்படுத்துவது காலத்தின் தேவை. அனைத்து துறைகளிலும் இந்தியா தனது அறிவின் எல்லைகளை தொடர்ந்து விரிவுபடுத்துவதற்கு பொது நிதியுடன், தனியார் மற்றும் தொண்டு நிதியும் அவசியம். இதன் பொருட்டு, சி.பி.ஆர் போல இன்னும் நிறைய நிறுவனங்கள் உருவாவதை அரசு பொறுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் உதவவும் செய்ய வேண்டும்.
This editorial has been translated from English, which can be read here.
Published - March 06, 2023 11:10 am IST