ADVERTISEMENT

அவசியமான சமிக்ஞை

Updated - November 09, 2022 12:13 pm IST

Published - November 09, 2022 11:23 am IST

காலம் செல்ல செல்ல உலகின் எதிர்காலத்தை பாதுகாப்பது இன்னும் அதிக விலையை கோரும் என்பதை காலநிலை மாற்ற மாநாடு வலியுறுத்த வேண்டும்.

எகிப்திலுள்ள கடலோர நகரமான ஷர்ம்-எல்-ஷேக்கில் 27வது காலநிலை மாநாடு நடைபெற்று வருகிறது. இரண்டு வாரங்களுக்கும் மேலாக அங்கு அரச தலைவர்கள், ராஜதந்திரிகள், வர்த்தக தலைவர்கள், செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் செல்வாக்கு கொண்டவர்கள் ஒன்று கூடி விவாதிப்பார்கள். பேரழிவுக்கு இட்டுச் செல்லும் காலநிலை மாற்றத்துக்கு எதிராக புவியின் வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், எரிசக்தி நுகர்வில் உலகலாளவிய அளவில் மாற்றத்தை முன்னெடுத்து செல்லும் ஒரு முயற்சி இது. ஒவ்வொரு காலநிலை மாநாடும் கடுமையான, சமரசமற்ற நடவடிக்கைகளை கோரும் ஒரு ஆவணத்துடன் முடிந்தாலும், அடிப்படை கொள்கை நிலையானதுதான்: பொருளாதார வளர்ச்சியில் சமரசம் செய்துக் கொள்ளாமல் வெப்பமயமாதலின் விளைவுகளை தவிர்ப்பதற்கு தேவையான செலவுகளுக்கு அனைத்து நாடுகளும் தமது பங்களிப்பை செலுத்துவதை உறுதிப்படுத்துவது. அதே நேரம், இந்த நெருக்கடியை அதிகமாக்குவதில் அந்த நாடுகளுக்கு இருந்த வரலாற்றுப் பொறுப்பை கணக்கிலெடுப்பதையும் பேசுவது. வெப்பமயமாக்குதலுக்கு தாம் காரணம் இல்லையென்றாலும் அதனால் மிக அதிகமான இழப்புகளை சந்திக்கக் கூடிய பல நாடுகள் இருக்கின்றன, குறிப்பாக தீவு நாடுகள். காலநிலை மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்படும் ஒப்பந்தங்களை அதில் கையெழுத்திடும் நாடுகள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்பதில்லை, இதன் காரணமாக திடீர் மாற்றங்களும் அடிக்கடி நிகழும் என்கிற நிலையில் – அமெரிக்கா தன்னிச்சையாக ஒப்பந்தத்தை விட்டு வெளியேறி மீண்டும் திரும்ப சேர்ந்தது ஒரு உதாரணம் – இந்த கூட்டங்கள் பொது மக்களுக்கு காட்டிக்கொள்வதற்கான ஒரு அரங்காகவும் செயல்படுகின்றன. மிகப் பெரிய சுற்றுசூழல் இலக்குகளுக்கான தங்களது உறுதிகளை நாடுகள் அறிவித்தாலும் அதை செய்வதற்கு தேவையான கடுமையான நடவடிக்கைகளை அந்நாடுகள் எடுப்பதில்லை. காரணம் இந்த நடவடிக்கைகள் அரசியல்ரீதியான பின்னடைவையே ஏற்படுத்தும். ஆனாலும் காலநிலை மாநாடுகள் ஒரு பயனுள்ள உந்துதலாக

செயல்படுகின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பு கூட காலநிலை மாற்றத்துக்கும் வெப்பமயமாதலுக்கும் உள்ள தொடர்பு பற்றி பலர் விமர்சனப்பூர்வமாக பேசினார்கள். ஆனால் இப்போது எந்தவொரு நாடும் அடிப்படை அறிவியலுக்கு சவால் விடுவதில்லை. புதைபடிவ எரிபொருள் இல்லாத எதிர்காலம் என்கிற திசையை நோக்கிதான் உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. எகிப்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் 27வது காலநிலை மாநாட்டின் தலைவருமான சமே ஷௌக்ரி சொன்னது போல 27வது காலநிலை மாநாட்டை ‘அமல்படுத்தும் மாநாடு’ என்று பார்ப்பது பொருத்தமாக இருக்கும். புதைபடிவ எரிபொருட்களிலிருந்து புதுப்பிக்கப்பட்ட எரிபொருட்களுக்கு மாறுவது செலவுமிக்கது. இந்தியா, சீனா, பிரேசில், தென்னாப்ரிக்கா போன்ற வளரும் நாடுகள் எல்லாம் கார்பன் இல்லாத எதிர்காலத்தை உருவாக்குவதில் தங்களது உறுதிப்பாட்டை தெரிவித்தாலும், இடைப்பட்ட காலத்தில் புதைபடிவ எரிபொருட்களை சார்ந்திருப்பதற்கான உரிமையையும் இது குறிப்பிட்டு காட்டுகிறது. வளர்ந்த நாடுகள் இந்த செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது. ஆனால் எப்படி இந்த செலவுகளை செலுத்துவது என்பதை முடிவு செய்வதில் பல சச்சரவுகள் இருக்கின்றன. ஏற்கனவே காலநிலை மாற்ற பேரழிவுகளால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் இந்த செலவுகளை ஏற்கும் முறை வெளிப்படையாக இருக்க வேண்டியது பற்றியும் இந்த ‘அமல்படுத்தும் மாநாடு’ பேச வேண்டும் என்று இந்தியா சொல்லியிருக்கிறது. இதன் பொருள், இந்த முதலீடுகளை பெறும் நாடுகள் அவற்றை வைத்து எப்படி மாசுபடுத்தும் மூலப்பொருட்களிலிருந்து நகர்கின்றன என்பது பற்றியும் இன்னும் பெரிய வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதும்கூட. 2021ன் கிளாஸ்கோ மாநாட்டில் ‘நிகர பூஜ்யம்’ அல்லது ‘கார்பன் நடுநிலை’ போன்ற உறுதிப்பாடுகள் முக்கியமான கருத்தாக்கங்களாக இருந்தன. ஆனால், அமல்படுத்தும் மாநாடுகள் எந்தவொரு பெரிய லட்சியங்களையும் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இருந்தபோதும், பெரும்பாலும் அமைதியாக இருப்பவர்கள் மற்றும் அடிமட்டத்தில் இருப்பவர்களே பணியை செய்து முடிக்கிறார்கள். 27வது காலநிலை மாநாடு சொல்லவந்த செய்தியை தெளிவாகவும் உரக்கவும் முன் வைக்கவேண்டும். போர் அல்லது அமைதி, வறுமை அல்லது நிறைவு என எதுவாக இருந்தாலும் உலகின் எதிர்காலத்தை பாதுகாப்பதென்பது நாள் செல்லச் செல்ல அதிக செலவுகளை கோருவதாக இருக்கப் போகிறது என்பதுதான் அந்த செய்தி.

This editorial has been translated from English, which can be read here.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT