பாலியல் வல்லுறவு, கடத்தல், குழந்தைகள் மீதான வன்முறை, திருட்டு சம்பவங்கள், கொலைகள் என 2021இல் பதிவான வன்முறைக் குற்றங்களின் எண்ணிக்கை, கொள்ளை நோய்க்கு முன்பிருந்ததை விட அதிகமாகியிருக்கின்றன என்பது கவலையளிக்கும் ஒரு விஷயம். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இந்த வாரத் தொடக்கத்தில் வெளியிட்டிருந்த இந்தியாவில் குற்றங்கள் என்கிற அறிக்கையின் படி 2020இல் குறைந்திருந்த குற்றங்கள் ஒப்பீட்டளவில் இப்போது அதிகரித்திருக்கின்றன. 2020இல் குற்றங்கள் குறைந்திருந்தன என்பது அதனாலேயே ஒரு முரண்பாடு போல தோன்றுகிறது. ஒன்று குற்றங்கள் குறைவாக பதிவாகியிருக்க வேண்டும், அல்லது விரிவான ஊரடங்குகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படாததன் காரணமாக அதிகம் நடந்திருக்காது. 2021இல் வன்முறைக் குற்றங்களில் பெருக்கம் இருந்தாலும், ஒட்டுமொத்தமான குற்ற விகிதம் (ஒரு லட்சம் மக்கள் வீதம்) 2020இல் 487.8 லிருந்து 2021இல் 445.9 என்கிற அளவுக்கு குறைந்திருந்தது. இதற்கு முக்கியமான காரணம், ஊரடங்குகளுடன் தொடர்புடைய அரசு ஊழியரின் உத்தரவுகளை மதிக்காமல் இருந்ததற்கான குற்றங்கள் குறைவாக இருந்ததுதான். இந்தியா, கோவிட் ஒன்றின் தாக்கத்தை முதன் முதலாக உணர்ந்த வருடம் 2020 என்றால், 2021ஆம் ஆண்டும் கடினமான வருடமாகவே இருந்தது. கொரோனா தொற்றின் புதிய வடிவமான டெல்டாவின் காரணமாக அப்படி இருந்தது. ஊரடங்கின் தீவிரத்தன்மையும் கால அளவுகளும் 2020ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது குறைவாகவே இருந்தது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 2019இல் 30.9 சதவிகிதமாகவும் 2020ல் 30.2 சதவிகிதமாகவும் இருந்த ‘கணவர் மற்றும் அவரது உறவினர்களால் துன்புறுத்தல்’ குற்றம் 31.8 சதவிகிதம் ஆக உயர்ந்தது. குடும்ப வன்முறை பெரிய பிரச்னையாக தொடர்ந்து இருப்பதையே இது சுட்டுகிறது. வன்முறை குற்றங்கள் அதிகரித்த போதிலும், குற்றப்பதிவு விகிதம் 2020ல் 75.8 சதவிகிதமாக இருந்தது 2021ல் 72.3 சதவிகிதமாக குறைந்தது. தண்டனை விகிதம் 2020ல் 59.2 சதவிகிதம் இருந்தது 57 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. அதாவது, குற்றங்கள் அதிகம் நடந்த ஒரு வருடத்தில் சட்டரீதியான அமலாக்கம் குறைவாகவே இருந்திருக்கிறது. இந்த போக்குகளை மாநிலவாரியாக பார்க்க வேண்டும் – அஸ்ஸாம் (ஒரு லட்சம் மக்களுக்கு 76.6 வன்முறை குற்றங்கள்), தில்லி (57) மற்றும் மேற்கு வங்கம் (48.7) மிக அதிக எண்ணிக்கைகளை கொண்டிருந்த மாநிலங்கள். குஜராத், ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மிக குறைவான எண்ணிக்கைகளை பதிவு செய்தன.
ஒரு லட்சம் மக்களுக்கு 12 என்கிற அளவில் 2021ல் இருந்த தற்கொலை விகிதம் கடந்த ஐந்து வருடங்களில் மிக அதிகம் என்பதையும் அறிக்கை வெளிப்படுத்தியது. குடும்ப பிரச்னைகள் (33.2 சதவிகிதம்) மற்றும் உடல்நிலை பிரச்னைகள் (18.6 சதவிகிதம்) முக்கியமான காரணங்களாக பதிவாகியிருக்கின்றன. பெரும்பாலும், தினக்கூலிக்கு வேலை செய்பவர்களும் (25.6 சதவிகிதம்) குடும்பத்தலைவிகளும் (14.1 சதவிகிதம்) தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். கொள்ளை நோயின் தீவிரத்தையும் மக்கள் மீதான அதன் மறைமுகமான விளைவுகளையுமே இது காட்டுகின்றன. கொள்ளை நோயில் குறிப்பாக டெல்டா அலையின் போது இந்தியா மிக அதிக அளவிலான மரணங்களை பதிவு செய்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சொல்லியிருக்கும் நிலையில், இந்த எண்ணிக்கைகள் ஆச்சரியத்தை அளிக்கவில்லை. இணையக்குற்றங்களில் 2020லிருந்து 5.9 சதவிகிதம் அதிகரிப்பு, இணைய சாதனங்களின் பயன்பாட்டையும் அது தொடர்பான சவால்களையும் சுட்டிக் காட்டுகின்றன. பெருநகரங்களில் (இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்கள்) இணையக் குற்றங்கள் 2020 ஆண்டோடு ஒப்பிடும் போது 8.3 சதவிகிதம் குறைந்திருந்தப் போதும், ஊரகப் பகுதிகளில் அதிகரித்திருந்தது. நிதி தொடர்பான விவகாரங்கள் உள்ளிட்ட பல விஷயங்களுக்காகவும் ஊரகப் பகுதிகளில் வாழும் மக்கள் அதிக அளவில் இணைய சாதனங்களை பயன்படுத்துவதை வைத்துப் பார்க்கும் போது, இணையக் குற்றங்கள் அதிகரித்திருப்பதன் பொருட்டு அரசு, இணைய செயல்பாடுகளில் உள்ள அபாயங்கள் பற்றி மக்களுக்கு அறிவுறுத்துவதுடன் இன்னும் சிறப்பான விதத்தில் சட்டம் அமலாக்கப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும்.
This editorial in Tamil has been translated from the English which can be read here.
Published - September 02, 2022 11:34 am IST