ADVERTISEMENT

அதீத முக்கியத்துவம்

Published - November 07, 2022 10:54 am IST

பா.ஜ.கவின் கணக்குகளில் குஜராத்துக்கு ஒரு அதீதமான முக்கியத்துவம் இருக்கிறது.

பா.ஜ.கவும் பிரதமர் நரேந்திர மோதியும் முன்னெடுத்து வரக்கூடிய, தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய ஒரு அரசியல் மாதிரியை அறிமுகப்படுத்தியது என்ற வகையில் குஜராத்துக்கு இந்திய அரசியலில் ஒரு முக்கியமான இடம் இருக்கிறது. அதிகாரத்துக்கு தீவிரமான போட்டியாக ஆம் ஆத்மி கட்சி உருவெடுத்திருக்கும் நிலையில், அங்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல்கள் மும்முனை போட்டியாக இருக்கும். ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவின் கை இப்போதும் ஓங்கியிருக்கிறது என்பது தெளிவு. 2017ல் பா.ஜ.கவை வீழ்த்தும் அளவுக்கு வந்த காங்கிரஸ், அதற்குப் பிறகு சரிவையே சந்தித்து வருகிறது. இப்போதுவரை போராடும் மனநிலையை அக்கட்சி வெளிப்படுத்தவேயில்லை. காங்கிரஸின் புரிந்து கொள்ள முடியாத அலட்சியத்துக்கு முற்றிலும் மாறாக இருக்கிறது ஆம் ஆத்மியின் உற்சாகம். மோர்பியில் தொங்கு பாலம் உடைந்து வீழ்ந்ததும் அதில் மக்கள் இறந்ததும் தொடர்ச்சியாக நல்ல நிர்வாகத்தை வழங்கி வருவது பற்றிய பா.ஜ.கவின் கூற்றுகளை வலிமையற்றதாக்கியிருக்கிறது. ஆனால், அக்கட்சியின் ஆதரவாளர்களைப் பொறுத்தவரை நிர்வாகத்துக்கும் வாக்களிப்பதற்கும் இடையில் பெரிதாக எந்தத் தொடரும் இல்லை. ஆழமான இந்து அடையாளமும் வெளிப்படையான வகுப்புவாதப் பிரிவினையும்தான் மாநிலத்தின் அரசியலைச் செலுத்திவருகிறது. நன்கு பரிசோதிக்கப்பட்ட இந்த முறையை கைவசப்படுத்த முயற்சிக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். அயோத்தியாவுக்குச் செல்ல இலவச பயணம் ஏற்பாடு செய்வதாக குஜராத் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கும் அவர், நாடெங்கிலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பா.ஜ.கவுக்கு சவால் விடுகிறார். தொண்டர் படையைப் பொறுத்தவரையில் களத்தில் ஆடுவதற்கு ஆம் ஆத்மிக்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை. திரு. கெஜ்ரிவாலின் செல்வாக்கான ஆளுமையிலிருந்தே அதன் வெற்றிகள் வருகின்றன. அது தன்னிச்சையான வாக்கு சேகரிப்புக்கும் வழி வகுக்கிறது. மார்ச்சில் பஞ்சாபில் வெற்றி பெற்றபோது இருந்த சூழல் குஜராத்திலும் அமையும் என்று அந்த கட்சி எதிர்பார்க்கிறது. இரண்டு முக்கியமான தேசியக் கட்சிகளுக்கு மாற்று வேண்டுமென்று நிறைய மக்களும் நினைக்கிறார்கள்.

மோர்பி துயரத்துக்கு முன்பு நடந்த CSDS கருத்து கணிப்பை வைத்துப் பார்க்கும்போது, வாக்காளர்களிடமிருந்து பா.ஜ.கவுக்கு தீவிரமான எதிர்ப்பு எதும் இருக்காது. 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் பா.ஜ.கவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். விலைவாசி பற்றி கவலை தெரிவித்த மக்கள்கூட பா.ஜ.கவுக்கு ஆதரவாகவே கருத்து சொன்னார்கள். 2017ஆம் வருடத்தோடு ஒப்பிடும் போது இந்துக்கள் மத்தியிலும் சில பழங்குடியினர் மத்தியிலும் பா.ஜ.கவை ஏற்கும் தன்மை அதிகரித்திருக்கிறது. தனக்கு எதிரான வாக்குகளை ஆம் ஆத்மி பிரிப்பதால் 2017ஐவிட அதன் வெற்றி எளிதாக இருக்கும் என்று பா.ஜ.க கணக்கிடுவது நியாயமான ஒன்றுதான். அது தவிர, அதன் கோட்டையைத் தக்கவைத்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் கட்சி மேற்கொள்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்வதால் குஜராத்தில் இருக்கும் ‘இரட்டை இஞ்சின்’ கொண்ட அரசின் நன்மைகளை எடுத்துக்காட்ட சர்ச்சைக்குரிய வகையில் அடுத்தடுத்து இரண்டு மிகப்பெரிய தனியார் தொழிற்சாலைகளை அறிவித்திருக்கிறது அரசு. மகராஷ்டிராவுக்குச் செல்லும் எண்ணத்தில் இருந்த முதலீட்டாளர்களை வற்புறுத்தி குஜராத்துக்கு கொண்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. பா.ஜ.கவுக்கு மிக சாதகமாக, மத்திய புலனாய்வு அமைப்புகளும் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கட்சி வசதியான ஒரு இடத்தில் இருந்தாலும், குஜராத்திற்கான முக்கியத்துவம் மிக அதிகமாக இருப்பதால் பா.ஜ.கவில் ஒரு அமைதியின்மை நிலவுகிறது. பா.ஜ.கவின் பார்வையில் இது ஒரு மாநிலத் தேர்தல் மட்டுமில்லை.

This editorial has been translated from English, which can be read here.

This is a Premium article available exclusively to our subscribers. To read 250+ such premium articles every month
You have exhausted your free article limit.
Please support quality journalism.
You have exhausted your free article limit.
Please support quality journalism.
The Hindu operates by its editorial values to provide you quality journalism.
This is your last free article.

ADVERTISEMENT

ADVERTISEMENT