வழக்கறிஞர்கள் சிலரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதை நிறுத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை தடுப்பதில் உச்ச நீதிமன்ற கொலீஜியம் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது. உயர் நீதிமன்ற நியமனங்களுக்கு பரிந்துரைகளை வழங்கும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட கொலீஜியம், தில்லி உயர் நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர் சவுரப் கிர்பாலையும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர் ஆர். ஜான் சத்தியனையும் மும்பை உயர் நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர் சோமசேகர் சுந்தரேசனையும் நீதிபதிகளாக நியமிக்கும் தனது முடிவை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது. ஒவ்வொரு நியமனத்தைப் பற்றியும் மத்திய அரசு எழுப்பிய ஆட்சேபணைகளுக்கு விரிவாக பதிலளித்த நிலையில், அரசியல் சாசன நீதிமன்றங்களுக்கான நியமனங்கள் தொடர்பாக நீதித்துறையுடன் தொடர்ந்து மோதிக் கொண்டிருக்கும் அரசின் நோக்கங்கள் அம்பலமாகியிருக்கின்றன. மத்திய அரசுக்கும் கொலீஜியத்துக்கும் இடையிலான தகவல் தொடர்புகளைப் பார்த்தால், இந்த நியமன முன்மொழிவுகள் குறித்து அரசு முன்வைத்த ஆட்சேபணைகள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கின்றன என்பது புரிந்தது. மேலும், தற்போதைய ஆட்சி நீதித்துறை நியமனங்களைக் கட்டுப்படுத்துவதில் எவ்வளவு தூரம் ஆர்வமாக இருக்கிறது என்பதும் இதன் மூலம் அப்பட்டமாக தெளிவானது. நியமிக்கப்பட இருப்பவரின் பாலியல் தேர்வை அடிப்படையாகக் கொண்ட ஆட்சேபணை, அரசின் பழங்கால சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட கருத்தியல் சார்பை வெளிப்படுத்தியது. மற்றொரு புறம், அவர்களுடைய சமூக ஊடக நடவடிக்கைகளுக்காக இரு வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதை தடுக்கும் முயற்சி, உயர் நீதித்துறைக்கான நியமனங்களை அரசியல் விசுவாசிகளுக்கானதாக பார்க்கும் ஒரு மோசமான அமைப்பின் மனநிலையை அம்பலப்படுத்துகிறது. கொலீஜியம் சுட்டிக் காட்டியது போல திரு.கிர்பாலின் பாலியல் தேர்வோ அல்லது இரு வழக்கறிஞர்கள் தமது அரசியல் கருத்துகளை வெளிப்படுத்துவது போன்றவற்றாலோ அவர்களது தகுதியோ நேர்மையோ பாதிக்கப்படாது.
நீதித்துறை நியமனங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட கூடியவர்களுக்கு அரசியல் கருத்துகள் இருக்கக் கூடாது என்று அரசு நினைப்பதுப்போல தெரிகிறது. அவர்களுடைய பார்வையையோ கருத்துகளையோ முன் வைப்பது, நீதிபதிகளாக பணிபுரிவதில் பாரபட்சமாக செயல்படுவதற்கு வழி வகுக்கும் என்பது போலவும் நினைக்கிறது. ஆனால் சில அரசியல் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்புடைய வேறு சில நபர்களின் பெயர்கள் பற்றி அரசுக்கு எந்த ஆட்சேபணையும் இருப்பது போல தெரியவில்லை என்பதே இதற்கான மறுப்பாகவும் இருக்கிறது. சொல்லப்போனால், நீதித்துறை நியமனங்களின் வரலாற்றைப் பார்க்கும்போது, மத்திய அல்லது மாநில அரசுகளில் இருக்கும் அரசியல் தலைமைகளின் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கும் அரசு சட்ட அதிகாரிகள்தான் பல முறை நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் தலைவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற அமர்வுகளில் பதவிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக பாலியல் தேர்வு பற்றிய ஆட்சேபணை மிக மோசமானது. காரணம், பாலினம் அல்லது பாலியல் தேர்வு காரணமாக பாகுபாடு காட்டக்கூடாது என்ற அரசியல் சாசன நிலைப்பாட்டுக்கு எதிரான ஒன்று இது. கொலீஜியம் நியமன முறை வெளிப்படைத்தன்மையற்றது என்பதாலும், பரிசீலனைக்கான வரம்புகளை அது சுருக்கிவிடும் என்பதாலும் அந்த முறையில் செய்யப்படும் நியமனங்கள் தவறானது என்ற பார்வை நியாயமானதே. ஆனால் தனது அரசியல் செயல்திட்டத்துக்கு உகந்ததாக இல்லாதவர்களுக்கு பதவிகளை மறுக்கும் வகையில் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதை வைத்துப் பார்க்கும்போது, எவ்விதமான அரசு தலையீடும் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்ற தோற்றத்தையே ஏற்படுத்தும்.
This editorial has been translated from English, which can be read here.
Published - January 23, 2023 11:50 am IST